கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை பிகேஆர் தேசிய இளைஞர் காங்கிரஸில் (ஏஎம்கே) ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, இம்மாதிரியான நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரி ஆகியோரை அவ்வளவு எளிதில் விடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“இந்த முரட்டுத்தனமான நடத்தையை, தீர்க்கமான நடவடிக்கை இல்லாமல் விட்டுவிட முடியாது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எனவே, பொறுப்பான குற்றவாளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கட்சி ஒழுக்காற்று வாரியத்தை நான் கேட்டுள்ளேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
கட்சியின் பிம்பத்திற்கு களங்கம் விளைவித்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு காவல் துறையினரிடமும் கேட்டுள்ளதாக அன்வார் கூறினார்.
முன்னதாக இன்று, ஏஎம்கே முன்னாள் நிரந்தர தலைவர் முகமட் மிசான் அட்லி முகமட் நோர் உட்பட பல பிரதிநிதிகள் காங்கிரசுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டபோது கலவரம் வெடித்தது.
மலாக்கா அனைத்துலக வணிக மையத்திற்கு (எம்ஐடிசி) வெளியே ஒரு சண்டை வெடித்தில், அவர்களில் ஒருவருக்கு கல் அடிப்பட்டு தலையில் இரத்தப்போக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.