கோலாலம்பூர் – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘வல்லினம் விருது’ வழங்கும் விழா மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருது தொகையாக ஐயாயிரம் ரிங்கிட்டுடன் சை.பீர்முகம்மது அவர்கள் எழுதிய ‘அக்கினி வளையங்கள்’ எனும் நாவலையும் வல்லினம் பதிப்பிக்கிறது. இந்த விழாவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சு.வேணுகோபால் ஆகியோர் சிறப்பு வருகை புரிகின்றனர். நிகழ்ச்சியில் அவர்களது இலக்கிய உரையும் இடம்பெறும்.
சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, கவிதை, பத்திகள் என பல்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கியவர் எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள். ‘வேரும் வாழ்வும்’ எனும் தலைப்பில் மலேசியாவின் ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி ஆவணப்படுத்தியது இவர் ஆற்றிய முக்கியப் பணிகளில் ஒன்று.
தமிழ் இளைஞர் மணிமன்றம், முத்தமிழ் படிப்பகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முகில் பதிப்பகம் என பல இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு மலேசிய இலக்கியத்திற்குத் தொண்டாற்றியுள்ள சை.பீர்முகம்மது அவர்களின் பணியைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22.12.2019 (ஞாயிறு) காலை மணி 10.30க்கு கெடா சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நடைபெறும் இந்த விருது விழாவுக்கு எழுத்தாளர்களையும் வாசகர்களையும் வல்லினம் இலக்கியக்குழு வரவேற்கிறது.