கோலாலம்பூர்: ஜின்ஜாங்கில் உள்ள ஸ்ரீ அமான் மக்கள் வீட்டுவசதி திட்ட (பிபிஆர்) குடியிருப்பில் தனது ஒன்பது வயது மகளை துண்புறுத்தியதாக நம்பப்படும் ஓர் இந்தியப் பெண்ணை காவல் துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
நேற்று சமூக ஊடகங்களில் வெளிவந்த 16 நிமிட காணொளி தொடர்பில், 22 வயதுடைய அப்பெண் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
அந்தக் காணொளியில் அப்பெண் பேனா என்று நம்பப்படும் ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தி அச்சிறுமியை எச்சரித்து திட்டுவதைக் காண முடிந்தது.
“பாதிக்கப்பட்டவரை காவல் அதிகாரிகள் மீட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்” என்று அவர் இன்று சனிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அப்பெண் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களும் விசாரணைக்கு உதவுவதற்காக எடுக்கப்பட்டதாக ருஸ்டி கூறினார். இந்த வழக்கு சிறுவர் சட்டம் 2001 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.