dinகோலாலம்பூர்: ஜாரிங்கான் மெலாயு மலேசியாவின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கடந்த ஆண்டு ஒரு பேரணியின் போது பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்திக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்திய வழக்கில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், 90,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு கிள்ளானில் நடந்த பேரணியின் போது அஸ்வாண்டின், வேதமூர்த்தியின் மீது தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து வேதமூர்த்தி கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அஸ்வாண்டினுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்குக்கான விசாரணை இன்று நீதித்துறை ஆணையர் ரோஹானி இஸ்மாயில் முன் தொடங்கவிருந்தது, ஆனால், வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் இரு தரப்பும் தீர்வு காண ஒப்புக்கொண்டன.
அஸ்வாண்டின் பெரிதா ஹாரியான், மக்கள் ஒசை மற்றும் அவரது தமது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
30 நாட்களுக்குள் இப்பணமானது செலுத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் தீர்ப்பாக பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் ஆஜரான வேதமூர்த்தி பின்னர் பத்திரிகையாளர்களிடம் இந்த விவகாரம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது என்று நம்புவதாகக் கூறினார்.
“கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, இது முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர் மன்னிப்பு கோரியுள்ளார் மற்றும் விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டார், மேலும், இவ்விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது.” என்று அவர் கூறினார்.