Home One Line P2 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்

10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்

1019
0
SHARE
Ad
விஸ்கி ரக மதுபானங்கள் – கோப்புப் படம்

நியூயார்க் – ஸ்காட்லாந்து நாட்டின் கண்டுபிடிப்பான ஸ்காட்ச் விஸ்கி என்றழைக்கப்படும் மதுபானம் பலவிதமான ரகங்களில், பலவிதமான விலைகளில், எண்ணிலடங்கா எண்ணிக்கையில் உலகம் எங்கும் விற்பனையாகிறது.

மதுபானத்தை அருந்தி மகிழ்வோர் ஒருபுறம் என்றால், இத்தகைய விலையுயர்ந்த மதுபானங்கள், குறிப்பாக வைன் என்ற திராட்சை ரச மதுபானங்களை பாதுகாப்பாக நீண்ட காலம் சேகரித்து வைத்திருப்போர் இன்னொரு ரகம். கால ஓட்டத்தில் ஒரு மதுபானம் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைப் பொறுத்து அதன் மதிப்பும், விலையும் அதிகரிக்கும்.

அந்த வகையில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ரிச்சர்ட் கூடிங் என்ற ரசனையாளர் தன் வாழ்நாளில் சேகரித்து வைத்த விஸ்கி மதுபானங்களை ஏலத்திற்கு விட அவரது குடும்பம் முன்வந்துள்ளது.

#TamilSchoolmychoice

சரி! இந்த விஸ்கி ரக மதுபானங்கள் எவ்வளவு விலைக்கு ஏலம் போகும் என நினைக்கிறீர்கள்?

ஏறத்தாழ 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிட்டிருக்கிறது விஸ்கி ஆக்‌ஷனியர்ஸ் (Whisky Auctioneers) என்ற சிறப்பான விஸ்கிகளை ஏலத்தில் விற்பனை செய்யும் நிறுவனம்.

அமரர் ரிச்சர்ட் கூடிங் தன் வாழ்நாளில் அடிக்கடி ஸ்காட்லாந்து சென்று அங்குள்ள மதுபான ஆலைகளிலும், ஏல விற்பனைகளிலும் சிறப்பு விஸ்கி மதுபானங்களை வாங்கி சேகரித்திருக்கிறார்.

சுமார் 3,900 மதுபானப் புட்டிகளை சேகரித்த கூடிங்கின் சேகரிப்பில் ஒரே ஒரு விஸ்கி மதுபானப் புட்டி மட்டும் 1.6 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும் ஏல விற்பனை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தனித்தனியான இரண்டு ஏல விற்பனைகளின் மூலம் இந்த விஸ்கி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்.

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சில விஸ்கி மதுபானங்கள் 118,000 டாலர் முதல் 131,000 டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஓர் அமெரிக்க இறக்குமதியான மெக்கல்லன் ரக – 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த – விஸ்கி மதுபானப் புட்டி 1.6 மில்லியன் டாலர்களுக்கு விலைபோகக்கூடும் எனக் கருதப்படுகிறது.