ஜோர்ஜ் டவுன்: கோலாலம்பூரில் மோன்ட் கியாராவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த திங்களன்று இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும், அவர்களின் வீட்டில் கஞ்சா வளர்ப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
புலனாய்வு மற்றும் பொது மக்களின் தகவல்கள் அடிப்படையில், காவல் துறை சோதனையில் 24 முதல் 32 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்துக் முகமட் கலீல் காடிர் முகமட் தெரிவித்தார்.
மூன்று முதல் நான்கு அடி உயரமுள்ள 54 கஞ்சா செடிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 2.6 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா இலைகள் மற்றும் 48 கஞ்சா விதைகளை இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டன. மொத்தமாக இதன் மதிப்பீடு 1.21 மில்லியன் ரிங்கிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
“ஹைட்ரோபோனிக் செயல்முறையைப் பயன்படுத்தி அவர்கள் ஆறு மாதங்களாக நடவு செய்து வருவதாக விசாரணை முடிவுகள் காட்டுகின்றன.” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அம்மூன்று சந்தேக நபர்களும் அடுத்த திங்கட்கிழமை வரை விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.