கோலாலம்பூர்: மலேசிய பூப்பந்து கழகம் (பிஏஎம்), 30-வது சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தந்த எஸ்.கிஷோனாவின் விளையாட்டுத் தரத்தை மேலும் மேம்படுத்த சிறந்த திட்டத்தை திட்டமிட வேண்டும் என்று முன்னாள் தேசிய பூப்பந்து வீரர் ரோஸ்லின் ஹாசிம் கேட்டுக் கொண்டார்.
உலகின் மிக உயர்ந்த தரவரிசை பூப்பந்து விளையாட்டாளர்களை வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய கிஷோனாவிற்கு சிறந்த வழிகாட்டியாக பிஏஎம் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ரோஸ்லினைப் பொறுத்தவரை, கிஷோனாவின் திறமை மெருகூட்டப்பட வேண்டும், மேலும், அனைத்துலக அரங்கில் மேலும் பல போட்டியாளர்களை ஆச்சரியப்பட வைக்க வேண்டி, பிஏம்எம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
“தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் கிஷோனா அனைத்து மலேசியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில் இது எதிர்பாராத ஒன்று, வெற்றி பெறுவதில் அவர் மீது கவனம் வைக்கப்படவில்லை” என்று ரோஸ்லின் கூறினார்.