சென்னை – ஓரிரு வாரங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்காது – எப்படியும் ஒத்தி வைத்து விடுவார்கள் என சோம்பல் முறித்துக் கிடந்த தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களத்தில் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பரபரப்பாக, இரவு பகலாக கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான தொகுதிகளைப் பங்கீடு செய்யும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையில் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து, நாளை அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவிருக்கின்றனர். வேட்புமனுத் தாக்கலுக்கு நாளையே இறுதிநாள் என்பதால் எல்லாக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
எதிர்வரும் டிசம்பர் 27, 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
அரசியல் வியூக ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடப்பது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது. உச்ச நீதிமன்றம் சாதகமானத் தீர்ப்பு வழங்கும் என மு.க.ஸ்டாலின் சற்று மிதமாக இருந்து விட்டார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், அடுத்தடுத்து தொடர்ந்து திமுக நீதிமன்றத்தை நாடுவது அதன் பலவீனத்தையே காட்டுவதாகவும், உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்தி வைப்பதில் மட்டும் திமுக அதிக ஆர்வம் காட்டுகிறது என்றும் ஒரு கருத்து நிலவுவது திமுகவுக்கு பின்னடைவாக அமையக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.