Home One Line P2 “தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்

“தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்

1028
0
SHARE
Ad

சென்னை – அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரையீடு காணவிருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படத்தைக் காண இன்னும் சுமார் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் நிலையில், உலகம் எங்கும் உள்ள அவரது இரசிகர்கள் நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) மாலையில் வெளியிடப்படவிருக்கும் அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என அடுத்தடுத்து வசூல் சாதனைப் படங்களை வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு ரஜினி அரசியலில் காலடி வைப்பார், புதிய கட்சியை ஏப்ரலில் தொடங்குவார் என ஆரூடங்கள் கூறப்படும் வேளையில், தர்பாரின் வெற்றி ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே, தர்பார் படத்தின் குறுமுன்னோட்டம் வெளியிடப்பட்டு, மில்லியன் கணக்கான மக்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். அடுத்து ‘சும்மா கிழி’ என்ற பாடல் வெளியிடப்பட்டு அதுவும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

#TamilSchoolmychoice

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் டிசம்பர் 7-ஆம் தேதி நடந்தேறியது.

திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு தர்பார் முன்னோட்டம் வெளியானதும் அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு அந்த முன்னோட்டத்தைப் பற்றித்தான் பேச்சாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.