சுங்கை சிப்புட் – அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட மஇகா எண்ணம் கொண்டுள்ளதாக அறிவித்திருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்ப கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, அங்குள்ள பொதுமக்களோடும், மற்ற தேசிய முன்னணி ஆதரவுக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களோடும் அளவளாவினார்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கலந்து கொண்ட மக்களிடையே சிறப்புரையும் நிகழ்த்தினார் விக்னேஸ்வரன்.துன் சம்பந்தன் காலம் தொட்டு மஇகாவின் தேசியத் தலைவர்கள் போட்டியிட்டு, தேசிய முன்னணி வென்று வந்துள்ள சுங்கை சிப்புட், 2008 பொதுத் தேர்தலில் அப்போதைய பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியால் கைப்பற்றப்பட்டது. துன் சாமிவேலுவை நீண்ட காலம் எதிர்த்து வந்த டாக்டர் மைக்கல் ஜெயகுமார் அந்தப் பொதுத் தேர்தலில் சாமிவேலுவைத் தோற்கடித்தார். தொடர்ந்து 2013 பொதுத் தேர்தலிலும் மைக்கல் ஜெயகுமார் அங்கு வெற்றி பெற்றார். இந்த முறை மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட எஸ்.கே.தேவமணியைத் தோற்கடித்தார் மைக்கல் ஜெயகுமார்.
மலேசிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான மைக்கல் ஜெயகுமார் 2008, 2013 இரண்டு பொதுத் தேர்தல்களிலும் பிகேஆர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். ஆனால், 2018 பொதுத் தேர்தலில் அவருக்கே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்க பிகேஆர் கட்சி முன்வந்தாலும், தனது சொந்த கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட மைக்கல் ஜெயகுமார் அடம் பிடித்த காரணத்தால், அதற்கு இடம் தராமல் பிகேஆர் கட்சியே மீண்டும் அங்கு போட்டியிட்டது. அதன் சார்பில் கேசவன் சுப்பிரமணியம் போட்டியிட்டு அங்கு வெற்றி பெற்றார்.
மஇகா சார்பில் போட்டியிட்ட எஸ்.கே.தேவமணி மீண்டும் தோல்வியைத் தழுவினார். தனது பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியின் சார்பில் போட்டியிட்ட மைக்கல் ஜெயகுமார் 1,505 வாக்குகள் மட்டுமே பெற்று படுமோசமாகத் தோல்வியுற்றார்.
தற்போது 15-வது பொதுத் தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுங்கை சிப்புட் தொகுதி மீண்டும் பரபரப்பின் களமாக மாறி வருகிறது.
அதற்கேற்ப, தீபாவளி உபசரிப்பு விழா நடத்தி அந்தத் தொகுதியில் அரசியல் பரபரப்பையும், வெப்பத்தையும் மீண்டும் அதிகரிக்கச் செய்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
கடந்த 14 டிசம்பர் சனிக்கிழமை நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: