கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணை 65-வது நாளாக இன்று வியாழக்கிழமை விசாரிக்கப்பட்டது.
துணை அரசு வழக்கறிஞர் வி.சிதம்பரத்திற்கு பதிலளித்த நஜிப், ஒவ்வொரு முறையும் காசோலையில் கையெழுத்திட்டபோது தனது அம்பேங்க் தனிப்பட்ட கணக்கில் நிலுவைத் தொகையைப் பற்றி தாம் கேட்டதில்லை என்று நஜிப் கூறினார்.
மேலும், தனது அம்பேங்க் கணக்கில் உள்ள பணம் போதுமானதாக இருப்பதை உணர்ந்ததாகவும், அதில் இருக்கும் பணம் எவ்வளவு என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
நஜிப் கையெழுத்திட்ட காசோலைகளின் மதிப்பு, மீண்டும் வங்கி இருப்பை சரிபார்க்கும் அளவிற்கு பெரிதாக இல்லை என்றும் அவர் கூறினார்.
தெளிவான தேவை இருந்தால், அவர் தனது முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்லின் அலியாஸுடன் சரிபார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறினார்.
அவர் வீட்டில் இருக்கும் போது, தனது கணக்கைப் பற்றி யாரிடமும் கேட்கவில்லை என்று கூறினார். வி.சிதம்பரம் பின்னர் நஜிப் வீட்டில் இருந்தபோது 2.5 மில்லியன் ரிங்கிட்டுகான ஒரு காசோலையை எவ்வாறு வெளியிட்டார் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நஜிப், மில்லியன் கணக்கான மதிப்புள்ள காசோலைகள் இருந்தபோதிலும், தனது மூன்று கணக்குகளில் போதுமான பணம் இருப்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.
அம்பேங்க் கணக்கில் உள்ள நிதிகளின் ஆதாரம் அரபு நிதிகளிலிருந்து வந்ததா என்ற கேள்விக்கு, அவை அங்கிருந்துதான் வந்தவை என்று நஜிப் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் ஒருவர் எப்படி தனது நிதிக் கணக்கை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தை கணக்கின் பொறுப்பான தனது தனிப்பட்ட செயலாளரிடம் கேட்க வேண்டும் என்று நஜிப் நீதிமன்றத்திற்கு விளக்கினார்.