கோத்தா கினபாலு: முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். ஆயினும், வருகிற 15-வது பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்தலில் களம் இறங்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
“இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாதது எனக்கு ஓர் உணர்ச்சிகரமான தருணம். தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் கிமானிஸ் மக்களைப் பாதித்துள்ள நிலையில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்துள்ளது என்று நான் நம்புகிறேன்.”
“15-வது பொதுத் தேர்தலில் நான் மீண்டும் கிமானிஸில் போட்டியிடுவேன்” என்று அனிபா இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அனிபா அமான் வெற்றிப்பெற்றதை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்தது.
கடந்த பொதுத் தேர்தலில், அனிபா 156 வாக்குகள் வித்தியாசத்தில் கிமானிஸ் தொகுதியை வென்றார்.
கடந்த திங்களன்று, வருகிற ஜனவரி 18-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) கிமானிஸ் இடைத்தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 4-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்களிப்பு ஜனவரி 14-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.