கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் நேற்று புதன்கிழமை தொடங்கி தலைநகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உச்சமாநாட்டில் (கேஎல் சம்மிட் 2019) கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சமாநாட்டின் தொடக்க விழாவில் கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் உள்ள மண்டபத்திற்குள் ஜாகிர் நாயக் தனது ஆதரவாளர்களோடு நுழைவதைக் காண முடிந்தது.
மேலும், இஸ்லாமிய உலகின் முன்னுரிமைகள் மற்றும் சவால்கள் குறித்த முதல் வட்டமேசை அமர்விலும் ஜாகிர் கலந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமர்வில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் ஈரானிய அதிபர் ஹசான் ரூஹானி ஆகிய மூன்று முக்கியத் தலைவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்ட இந்த மாநாடானது, இஸ்லாமிய நாடுகளிடையே செழிப்பு மற்றும் பரஸ்பர முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகளை மதிப்பீடு செய்து மறுவரையறை செய்வதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.