கோத்தாகினபாலு : 2018 வரை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் அனிபா அமான்.
சபாவின் முன்னாள் முதலமைச்சர் மூசாஅமானின் தம்பி. சபா அம்னோவில் அண்ணன் தம்பிகள் இருவரின் ஆதிக்கமும், அரசியல் பலமும் பரவிக் கிடந்த காலமும் ஒன்று உண்டு.
2018 ஆட்சி மாற்றம் அனிபா அமானின் அரசியல் பாதையையும் திசை திருப்பியது. அண்ணன் மூசா அமான் சபாவில் ஆட்சியை இழந்து, ஊழல் குற்றச்சாட்டுகளோடு வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்.
அனிபா அமான் அம்னோவில் இருந்து விலகினார். அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி விட்டார் என அனைவரும் நினைத்திருந்தனர்.
திடீரென இந்த ஆண்டு பார்ட்டி சிந்தா சபா (Parti Cinta Sabah-பிசிஎஸ்) என்ற கட்சியின் தேசியத் தலைவராக சபா அரசியல் களத்தில் மீண்டும் அதிரடியாக நுழைந்தார்.
மீண்டும் அவர் அம்னோவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிசிஎஸ் கட்சியின் தலைவராக போங்கவான் (Bongawan) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் அனிபா அமான்.
நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்
தேசிய முன்னணியின் சார்பில் ஹாஜி ஏஜி ஷாயிரின், வாரிசான் சபா கட்சியில் டாவுட் பின் யூசோப், டெமோக்ராடிக் லிபரல் கட்சியின் (எல்டிபி) சார்பில் முகமட் அஸ்ரி பின் அப்துல் கானி ஆகியோர் அனிபா அமானை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.
வாரிசான் சபா கட்சியின் சார்பில் போட்டியிடும் டாவுட் பின் யூசோப், இந்தத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வருகிறது போங்கவான் சட்டமன்றத் தொகுதி. கிமானிஸ் தொகுதியில் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்தான் அனிபா அமான்.
ஆனால் அப்போது தேசிய முன்னணி-அம்னோவின் சார்பில் வெற்றி பெற்றார். அதுவும் சொற்ப வாக்குகளில்! 156 வாக்குகள்தான் அவர் பெற்ற பெரும்பான்மை!
எனினும் அவரது கிமானிஸ் தேர்தல் வெற்றி செல்லாது என வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, கோத்தா கினபாலு தேர்தல் நீதிமன்றம், அனிபாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்தது.
பின்னர் கூட்டரசு நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்திய அனிபா அமான் அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்தார்.
கிமானிஸ் நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் இந்த ஆண்டு ஜனவரி 18-இல் நடைபெற்றது. ஆனால் அனிபா அமான் மீண்டும் போட்டியிடவில்லை. அந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரது பழைய செல்வாக்கு ஓரளவு அவருக்கு உதவலாம்.
ஆனால், தேசிய முன்னணியின் சார்பில் இன்னொரு வேட்பாளரும் களமிறக்கப்பட்டிருக்கும்போது இந்த முறை சட்டமன்றத் தொகுதியில் அவர் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே!
எனினும், மீண்டும் சபா அரசியலில் எத்தகைய பங்கை அனிபா அமான் வகிக்க முடியும் என்பதை போங்கவான் தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்.
அந்த வகையில் அனைவராலும் கூர்ந்து பார்க்கப்படும் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக சபா தேர்தலில் திகழ்கிறது அனிபா அமான் போட்டியிடும் போங்கவான்!