Home One Line P1 சபா : மூசா அமான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்

சபா : மூசா அமான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்

641
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கு மூலகாரணமாகத் திகழ்ந்த மூசா அமான் ஆச்சரியப்படத்தக்க அளவில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.

33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஷாபி அப்டாலின் இரண்டு ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்க்க ஜூலை மாதத்தில் மூசா அமான் முற்பட்டார். அதற்கு முன்பாக அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொண்டதும் சர்ச்சையானது.

தேசிய முன்னணி – அம்னோ கூட்டணி வேட்பாளர் பட்டியலிலும், தேசியக் கூட்டணி வேட்பாளர் பட்டியலிலும் மூசா அமான் பெயர் இடம் பெறவில்லை.

#TamilSchoolmychoice

எனினும், சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினரான அவர் புதிய சட்டமன்றத் தொகுதியான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிட ஆர்வம் தெரிவித்தார். அறிக்கையும் விட்டார்.

சபா தேர்தலை சட்ட ரீதியாக நிறுத்துவதற்கும் நீதிமன்றப் போராட்டங்களை பல முனைகளில் அவர் நடத்தினார். எனினும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இறுதி முயற்சியாக சபா தேர்தலை நிறுத்தும் அவரது விண்ணப்பத்தை கூட்டரசுப் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

சபாவில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு என்பதில் தொடங்கி, இப்போது தேர்தல் நடைபெறுவது வரை எல்லா வகைகளிலும் சபா அரசியலின் கதாநாயகனாக கடந்த சில மாதங்களாக உலா வந்தவர் முன்னாள் முதலமைச்சர் மூசா அமான்.

எனினும், இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் அவர் ஒதுங்கிக் கொண்டதும் அரசியல் சோகம்தான்.

லிபாரான் தொகுதி அம்னோவினர் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என்ற மலேசியாகினி ஊடகச் செய்தியை மட்டும் மூசா அமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது குமுறலை அவர் வெளியிட்டிருக்கிறார்.

லிபாரான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகள், கம்-கம், சுங்கை மணிலா, சுங்கை சிபுகா ஆகியவை ஆகும். கடந்த சட்டமன்றத்தில் சுங்கை சிபுகா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அதன் பக்கத்துத் தொகுதியான சுங்கை மணிலாவில் போட்டியிடுவேன் என்ற அறிவிப்பையும் அவர் செய்திருந்தார்.

ஆனால் அவ்வாறு அவர் வேட்புமனுத் தாக்கல் எதையும் இன்று மேற்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து அவரது அரசியல் ஆதிக்கம் சபாவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அவரது அரசியல் செல்வாக்கும், ஆதரவுத் தளமும் சபா முழுவதும் பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவரது விலகல் அம்னோவை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறும் அரசியல் நகர்வுகள், பிரச்சாரங்கள் மூலம் தெரியவரும்.