Home One Line P1 சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது

சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது

580
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விறுவிறுப்பாகத் தொடங்கியது.

73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பலமுனைப் போட்டிகள் நிகழும் அளவுக்கு பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் வேட்புமனுத்தாக்கல்களை சமர்ப்பித்து வருகின்றனர் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்று முடிந்தன. அதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் பாரங்களை மீட்டுக் கொள்வதற்கான அவகாசம், ஆட்சேபங்களுக்கான கால அவகாசம் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மொகிதின் சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வி

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை கோத்தா கினபாலு வந்தடைந்த பிரதமர் மொகிதின் யாசின் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சு வார்தைகள் நடத்தினார்.

தேர்தலில் வெற்றி பெறுவதே முக்கியம், எனவே ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வதை நிறுத்துவோம் என மொகிதின் சகோதரக் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்தும் யாரும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி-தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கு இடையில் பல தொகுதிகளில் போட்டிகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையப் போட்டிகள் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் கூட்டணிக்கே சாதகமாக அமையும்.

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் சபா கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வாரிசான் பிளஸ் என்ற கூட்டணி பெயரில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள ஜசெக, அமானா இரண்டும் தங்களின் சின்னங்களை விட்டுக் கொடுத்து விட்டு வாரிசான் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

பிகேஆர் கட்சிக்கு வாரிசான் ஏழு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. இதனால் அதிருப்தி கொண்ட பிகேஆர் அந்த ஏழு தொகுதிகளையும் ஏற்றுக் கொண்டதோடு, தனது சொந்த சின்னத்திலேயே அந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.