ஓரிகோன் : அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரிகோன், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவிய காட்டுத் தீ கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரையில் 24 பேர் மரணமடைந்தனர். சுமார் 500,000 பேர் தங்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயினால் பல குடும்பங்கள் தங்களின் ஒட்டு மொத்த உடமைகளையும் இழந்துள்ளனர்.
சுமார் 100 வெவ்வேறு இடங்களில் இந்தக் காட்டுத் தீ தொடங்கி பரவியது. ஓரிகோன் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாகும். நேற்று வெள்ளிக்கிழமை தங்களின் இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு சுமார் 500,000 பேர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கலிபோர்னியா, ஓரிகோன், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களும் புகைமூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் சிறுசிறு அளவில் இந்தக் காட்டுத் தீ ஆங்காங்கே தொடங்கி தற்போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓரிகோனிலுள்ள மோலால்லா என்ற நகரிலுள்ள 9,000 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர். சுமார் 30 பேர் மட்டுமே வெளியேற மறுத்து வருகின்றனர். சாம்பலால் சூழப்பட்டு அந்நகர் காட்சியளிப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் என்ற அபாயத்தால் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை ஊரடங்கு விதிக்கப்படலாம் என காவல் துறையினர் அறிவித்தனர்.
தீயணைப்புப் படையினர் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் காட்டுத் தீயின் கோரத் தாண்டவங்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வானவெளியெங்கும் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த தீயின் சுவடுகளைக் கொண்ட வண்ணமயமான, புகைமூட்டம் சூழ்ந்த – அந்தப் படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்: