கோத்தா கினபாலு: டான்ஸ்ரீ மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
சபா சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் எடுத்த முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தை சட்ட நிறுவனமான எப்டி அகமட் அண்ட் கோ திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தாக்கல் செய்துள்ளது.
இது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) சரவாக் உயர் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை ஆணையர் லியோனார்ட் சின் என்பவரால் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபா அரசியலமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம், வாரிசான் பிளாஸ் அரசாங்கத்திலிருந்து 13 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து 65 உறுப்பினர்களைக் கொண்ட சபா சட்டமன்றத்தில் தனக்கு குறுகியப் பெரும்பான்மை இருப்பதாக மூசா கூறியிருந்தார்.
ஆயினும், தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்றும் அதனால், சபா சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக ஷாபி அப்டால் அறிவித்து, சட்டமன்றத்தைக் கலைத்தார்.
மாநில முதல்வர்கள் சட்டத்தில், முதலமைச்சர்கள மாநில சடமன்றத்தைக் கலைக்கக் கோர உரிமை இருப்பததாக அவர் கூறியிருந்தார்.
மாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்திருந்தார்.