Home One Line P1 சபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

சபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

830
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சபா சட்டமன்றத் தேர்தலைத் தடுத்து நிறுத்த இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.

நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 26, தேர்தலுக்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மூசா அமானின் 2018 வழக்கு

2018-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது யார் முதலமைச்சராவது என்ற போராட்டம் அப்போதைய முதலமைச்சர் மூசா அமானுக்கும், அந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற வாரிசான் சபா கூட்டணியின் தலைவர் ஷாபி அப்டாலுக்கும் இடையில் நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

சபா ஆளுநர் அப்போது ஷாபி அப்டாலை முதலமைச்சராக நியமித்தார். அந்த முடிவை எதிர்த்து மூசா அமான் வழக்கு தொடுத்திருந்தார். அவருடன் இணைந்து தம்பாருலி சட்டமன்ற உறுப்பினர் ஜாஹிட் நூர்டின் ஜாஹிம் என்பவரும் வாதியாக இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மூசா அமான், ஜாஹிட் இருவரும் தோல்வியடைந்தனர். அவர்களின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றமும் கடந்த 2019 நவம்பர் 28-இல் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்திற்கு அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். கூட்டரசு நீதிமன்றத்தால் ஒரு வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்னர் முன் அனுமதியை விண்ணப்பம் ஒன்றின் மூலம் வாதிகள் பெற வேண்டும்.

அவ்வாறு மூசா அமானும், ஜாஹிட்டும் சமர்ப்பித்த முன் அனுமதிக்கான விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி செவிமெடுத்தது. 2-1 என்ற பெரும்பான்மை தீர்ப்பின்வழி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மூசா அமான்-ஜாஹிட்டுக்கு முன் அனுமதியை வழங்கியது.

இதைத் தொடர்ந்து அடுத்து கூட்டரசு நீதிமன்றம் 2018-இல் ஷாபி அப்டால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது சரியா என்பதை நிர்ணயிக்கும் மூசா அமானின் வழக்கை விசாரிக்கும்.

ஆனால் அதற்கு முன்பாக சபா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து விடும் என்பதால் அந்த வழக்கில் மூசா வெற்றி பெற்றாலும் மீண்டும் முதலமைச்சராக முடியாது.

எனவே, கூட்டரசு நீதிமன்றம் தங்களின் வழக்கை விசாரிக்கும்வரை சபா தேர்தல் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற புதிய விண்ணப்பத்தை மூசா அமானுடன் இணைந்த மற்றொரு வாதியான ஜாஹிட் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 8) சமர்ப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தைத்தான் கூட்டரசு நீதிமன்றம் இன்று விசாரித்தது. எனினும் சபா தேர்தலை ஒத்தி வைக்கவும், இடைக்காலத் தடை விதிக்கவும் கூட்டரசு நீதிமன்றம் மறுத்து விட்டது.

இன்றைய விசாரணையின்போது மூசா அமானும் நீதிமன்றத்தில் இருந்தார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்றைய விண்ணப்பத்தை விசாரித்தது. அப்துல் ரஹ்மான் செப்லி, சபாரியா முகமட் யூசோப் மேரி லிம் தியாம் சுவான் ஆகிய மூன்று நீதிபதிகள் இன்றைய அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து சபா தேர்தலை நிறுத்துவதற்காக மூசா அமான் மேற்கொண்ட அனைத்து சட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

மூசா அமானின் 2020 வழக்கு

இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் மூசா அமானும் அவருடன் இணைந்த 33 சட்டமன்ற உறுப்பினர்களும் ஷாபி அப்டாலின் ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டனர். தங்களுக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாகக் கூறி மாநில ஆளுநரைச் சந்திக்க நெருக்குதல் தந்தனர்.

எனினும் ஆளுநர் மூசா அமான் குழுவினரைச் சந்திக்கவில்லை. மாறாக, ஷாபி அப்டாலின் கோரிக்கையை ஏற்று ஜூலை 30-ஆம் தேதி சபா சட்டமன்றத்தைக் கலைக்கும் உத்தரவை சபா ஆளுநர் பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிராகவும் மூசா அமான் 33 சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கையும் கோத்தாகினபாலு உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 21-இல் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து சபா மாநில சட்டமன்றத்தை கலைக்க ஆளுநர் ஜூஹார் மஹிருடின் அளித்த ஒப்புதலை எதிர்த்து, 33 முன்னாள் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றமும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.