கோத்தா கினபாலு – நேற்று சனிக்கிழமை காலை முதல் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில் அரங்கேறிய நம்ப முடியாத பல்வேறு அரசியல் காட்சிகளின் அரங்கேற்றத்தின் உச்ச கட்டமாக இரவு 9.30 மணிக்கு வாரிசான் சபா கட்சியின் தலைவர் சபா மாநில முதல்வராக மாநில ஆளுநர் துன் ஜூஹார் மஹிருடின் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
தேசிய முன்னணியைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் தனது வாரிசான் கட்சிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். எனினும் பல்வேறு கட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால், முதன் முறையாக சபா சட்டமன்றம் கூடும்போதுதான் வாரிசான் கட்சிக்கும் ஷாபி அப்டாலுக்கும் போதிய பெரும்பான்மை இருக்கிறதா என்பது உறுதியாகவும், இறுதியாகவும் தெரிய வரும்.
இதற்கு முன் வெள்ளிக்கிழமை மூசா அமான் சபா முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதுவரையில் அவர் அதிகாரபூர்வமாக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்பதால், சபா மாநிலத்தில் தற்போது 2 முதலமைச்சர்கள் பதவியில் இருக்கும் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நேற்றிரவு 7.00 மணிக்கு தான் இன்னும் சபா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை என மூசா அமான் அறிவித்திருந்தார்.