Home தேர்தல்-14 நஜிப் தொடர்புடைய ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் அதிரடி சோதனைகள்

நஜிப் தொடர்புடைய ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் அதிரடி சோதனைகள்

1591
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் உறவினர்களின் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தினர்.

சர்ச்சைக்குரிய ஆவணங்கள் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓர் அரசாங்க வாகனத்தில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஒருசில தரப்புகள் காவல் துறையில் புகாரைச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புக்கிட் பிந்தாங்கிலுள்ள பெவிலியன் ரெசிடென்சஸ் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 20 காவல் துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்ததை தங்களின் பத்திரிக்கையாளர்கள் பார்த்ததாக ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

காவல்துறையினருக்குத் துணையாக சீருடையில் இல்லாத பல காவல் துறை அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் அந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ அதே வேளையில், துன் மகாதீர் தனது புதிய அமைச்சரவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பெட்டாலிங் ஜெயாவில் நடத்திக் கொண்டிருந்தார்.

சட்டத்துக்குப் புறம்பான வகையில் அரசாங்க ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் ராய்ட்டர் செய்தி தெரிவிக்கிறது.

சோதனை நடத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் நஜிப்பின் குடும்ப உறவினர்கள் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. எனினும் அவர்கள் யார் எனக் காவல் துறையினர் பெயர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், நஜிப்-ரோஸ்மா இருவரும் வெளிநாடு செல்வதற்கும் குடிநுழைவுத் துறை தடை விதித்துள்ளது.