கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிரடியாக 182 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் அதிர்ச்சி தரும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 501 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஒருநாள் தொற்று சம்பவங்களின் பதிவு இதுவாகும்.
இதற்கு முக்கியக் காரணம் பெந்தெங் லகாட் டாத்து என்ற தொற்றுத் திரளின் பரவல் அதிகரித்தது ஆகும்.
ஜூன் 10-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மீட்சிக் காலம் தொடங்கியதிலிருந்து இதுவரையில் பதிவான மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னர் செப்டம்பர் 8-ஆம் தேதி 100 புதிய தொற்றுகள் ஒரே நாளில் பதிவானது.
பதிவான புதிய சம்பவங்களில் 167 தொற்றுகள் சபாவின் தாவாவ், லகாட் டாத்து வட்டாரங்களில் தொடங்கிய பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் தொடர்புடையவையாகும். 11 தொற்று சம்பவங்கள் சுங்கை தொற்றுத் திரளையும், 3 சம்பவங்கள் கெடாவின் தெலாகா தொற்றுத் திரளையும் உள்ளடக்கியதாகும்.
மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 4-ஆம் தேதிதான் மிக அதிகமாக ஒரே நாளில் 277 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் 10-ஆம் தேதி முதற்கொண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மீட்சிக் காலம் அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை என்பதும் ஆறுதலான ஓர் அம்சமாகும்.
எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 182 சம்பவங்களில் 181 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 1 நபர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவராவார்.
இந்த பெந்தெங் தொற்றுத் திரள் பரவுவதற்குக் காரணம் தடுப்புக் காவல் மையங்களில் மிக நெருக்கமான அளவில் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாகும் என சுகாதார அமைச்சின் அறிக்கை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.
எந்த இடமாக இருந்தாலும் மக்களிடையே கூடல் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் நூர் ஹிஷாம் வலியுறுத்தியிருந்தார். அவரது எச்சரிக்கை அடுத்த சில நாட்களிலேயே இத்தகைய பெரிய எண்ணிக்கையிலான தொற்றுகளினால் உண்மையாகியுள்ளது.
பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் முறையான ஆவணங்கள் இல்லாத இரண்டு வெளிநாட்டுக் குடியேறிகள் மூலம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் லகாட் டாத்து காவல் நிலைய தடுப்பு முகாமிலிருந்து தொடங்கியது.
அதைத் தொடர்ந்து 1,404 பேர் மீது பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவர்களில் 66 பேர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 64 பேர் சிறைக் கைதிகள் ஆவர். ஒருவர் சிறைத் துறை அதிகாரி. மற்றொருவர் அவரது ஒன்றரை வயது கொண்ட உறவினர் குழந்தையாவார்.
இதற்கிடையில் “சுங்கை தொற்றுத் திரள் (கிளஸ்டர்)” எனப்படும் புதிய தொற்றுக் குழு கெடாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,810 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,181 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் மொத்தம் 501 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூரில் தொற்று கண்ட 181 பேர்களில் 91 பேர் சபா மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள். உள்ளூரில் தொற்று கண்ட 90 பேர்களில் சபாவைச் சேர்ந்தவர்கள் 76 பேர். கெடாவைச் சேர்ந்தவர்கள் 14 பேர்.
வெளிநாட்டிலிருந்து தொற்று கண்ட ஒருவர் சிலாங்கூரைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஆவார்.