கோலாலம்பூர்: எந்தவொரு சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ள தனிநபர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லீயூ வு கியோங் கூறினார்.
2014-ஆம் ஆண்டு நவம்பரில் காவல் துறைக் காவலில் இறந்ததாகக் கூறப்படும் சைட் முகமட் அஸ்லானின் குடும்பத்தினருக்கு கணிசமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
“பொறுப்புணர்ச்சியும், எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்தின் காவலில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் நேற்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் புகார்களை விசாரிக்கும் ஆணையத்தை (ஐபிசிஎம்சி) அமைக்கும் எண்ணத்தை அரசாங்கம் தொடரும் என்றும், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க, இந்த ஆணையம் செயல்படும் என்றும் லீயூ கூறினார்.
“ஐபிசிஎம்சி காவல் துறையினரின் பொறுப்புணர்வை உறுதி செய்வது மட்டுமல்லாமல், காவல் துறையினரின் நலன்புரி பிரச்சனைகள் மற்றும் காவல் படையின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு சட்டபூர்வமான ஆணையமாக இயங்கும்” என்று அவர் கூறினார்.
ஐபிசிஎம்சி உருவாக்கும் முயற்சியில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் ஓர் அமர்வை நடத்தும் என்று லீயூ கூறினார்.
இந்த மசோதா தொடர்பான கூடுதல் திட்டங்களை அரசாங்கம் வரவேற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.