கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இஸ்லாமிய நாடுகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட குறியீட்டு நாணயம் (Cryptocurrency) இருக்க வேண்டிய ஆலோசனையை ஏற்பதாகக் கூறினார்.
உண்மையில், இஸ்லாமிய நாடுகளுக்கு என்று ஒரு பொதுவான நாணயம் என்ற கருத்தை மலேசியா நீண்டகாலமாக முன் வைத்து வருகிறதாகவும், ஆனால், உலகின் முக்கிய சக்திமிகு நாடுகள் இந்த திட்டத்திற்கு ஒரு தடையாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“ஏனென்றால், அவர்களின் நாணயங்கள் மற்றவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது அவர்களுக்கு கூடுதல் பலத்தைத் தருகிறது,” என்று அவர் தலைநகரில் உள்ள 2019 கோலாலம்பூர் உச்ச மாநாட்டில், அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் ஒரு வட்டமேசை விவாதத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“அமெரிக்க டாலர் நம்மிடம் இல்லையென்றால், நாம் ஒப்புக்கொண்டால் நம்முடைய சொந்த நாணயத்தையோ அல்லது பொதுவான நாணயத்தையோ (இஸ்லாமிய நாடுகள்) உருவாக்க முடியும் என்று ஈரானும் துருக்கியும் வாதிடுவதை கேள்விப்படுவது இதுவே முதல் முறை” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
இஸ்லாமிய நாடுகளுக்கு சிறப்பு குறியீட்டு நாணயத்தை வைத்திருக்க வேண்டும் என்ற ரூஹானியின் முன்மொழிவுக்கு பதிலளித்தபோது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.