கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை அசிலா ஹாத்ரியின் சத்தியப்பிரமாணத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில் சத்தியம் உச்சரித்தார்.
“அல்தான்துன்யா ஷாரிபு என்ற மங்கோலியப் பெண்ணைக் கொல்ல நான் எந்தவொரு நபருக்கும் கட்டளையிடவில்லை. உண்மையில், நான் ஒருபோதும் அவரைச் சந்தித்ததில்லை, இறந்தவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. நான் பொய் சொன்னால் அல்லாஹ்வின் சாபம் என்மீது இறங்கட்டும். நான் சொல்வது சரி என்றால், என்னை அவதூறு செய்து மனந்திரும்பாதவர்கள், இந்த உலகத்திலும் மறுமையிலும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வால் வெளியேற்றப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
நஜிப்பின் மனைவி டத்தின் ரோஸ்மா மன்சோரும் உடன் கலந்து கொண்டார். அவர்களின் மகள், நூரியானா நஜ்வா, அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி, அகமட் மஸ்லான் மற்றும் அப்துல் அசிஸ் அப்துல் ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி,முன்னாள் பிரதமர் நஜிப், மங்கோலியப் பெண்மணியான அல்தான்துன்யாவைக் கொல்ல தமக்கு கட்டளையிட்டதாக, காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு முன்னாள் அதிகாரியான அசிலாவின் சத்தியப்பிரமாணத்திற்கு பதிலளிப்பதற்காக இந்த சத்தியம் உச்சரிக்கப்பட்டது.