பிரிட்டன்: அடுத்த ஆண்டு புவி வெப்பமடைதல் போக்குத் தொடரும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை மீண்டும் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட ஒரு டிகிரிக்கு மேல் உயரக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டன் வானிலை அலுவலகத்தின்படி, 2020-ஆம் ஆண்டு, 1850-1900-க்கு இடையிலான சராசரியை விட 1.11 செல்சியஸ் வெப்பமாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த உயர்வுக்கு வலுவான காரணியாக அமைவது பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டில் தொழில்துறைக்கு முந்தைய வெப்பநிலையை விட உலகம் முதன்முதலில் ஒரு டிகிரி வெப்பமடைந்தது என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை இந்த குறியீட்டுக்கு அருகில் அல்லது அதற்கு மேல் காணப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நிலக்கரி பயன்பாட்டில் குறைவு இருந்தபோதிலும், இந்த ஆண்டு கரியமில வாயு வெளியேற்றம் சற்று உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
உலக கரிம திட்டத்தின் வருடாந்திர உமிழ்வு போக்குகள்படி, 2019-இல் கரியமில வாயு 0.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியே இந்த உயர்வுக்கு காரணம் என்றும், உமிழ்வுகளின் அளவு வெப்பநிலையை நேரடியாக பாதிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.