கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் ஆலோசகர்களாகச் செயல்பட்ட அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், தங்களின் ஆலோசனை வழங்கும் நடைமுறைகளில் தவறுகள் இழைத்த காரணத்தால் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 8.25 பில்லியன்) வரை நஷ்ட ஈடு வழங்க முன்வந்திருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் அமெரிக்க அரசாங்கத்துடன் நடந்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஊழல் தொடர்பான சட்டதிட்டங்களை மீறியதற்காக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டு, அதற்கான நஷ்ட ஈடாக இந்தத் தொகையை செலுத்த கோல்ட்மேன் சாச்ஸ் முன்வந்திருக்கிறது.
இந்த நடவடிக்கைக்காக சார்பற்ற ஒரு நடுநிலையாளர் மேற்பார்வையாளராக நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நீதி இலாகா, பங்குப் பரிமாற்ற ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, மற்றும் நியூயார்க் நகரின் நிதிச் சேவைகள் இலாகா ஆகிய அமைப்புகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்த சமரச ஏற்பாடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன அதிகாரிகளை குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தயாராக இருப்பதாகவும் மற்றொரு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.