Home கலை உலகம் திரைவிமர்சனம் : “ஹீரோ” – இந்தியக் கல்வி முறையை, நவீன தொழில்நுட்பத்தோடு சாடும் போதனைப் படம்

திரைவிமர்சனம் : “ஹீரோ” – இந்தியக் கல்வி முறையை, நவீன தொழில்நுட்பத்தோடு சாடும் போதனைப் படம்

899
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய நவீன இந்தியாவில் தொழில்நுட்பத் திறனும் அறிவாற்றலும் கொண்ட தொழிலாளர்களை மந்தைக் கூட்டமாக உற்பத்தி செய்வதே நோக்கமாக இருக்கிறது – மாறாக அவர்களின் சுய திறன்களை, சிந்தனைகளை ஊக்கப்படுத்தி மக்களுக்குத் தேவையான புதிய நவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவவில்லை என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹீரோ’.

அத்தகைய கல்வி முறையை கார்ப்பரேட் எனப்படும் தொழில் முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களின் சுய லாபத்திற்காக ஊக்குவிக்கின்றன, தீனி போட்டு வளர்க்கின்றன என்றும் தங்களின் பணபலத்தால் புதிய கண்டுபிடிப்புகளை, அதனை உருவாக்கும் மனிதர்களின் சிந்தனைகளை, முடிந்தால் அவர்களையும் அழிக்கின்றன, என்றும் விலாவாரியாக விளக்குகிறது ஹீரோ.

கதை, திரைக்கதை

சாதாரண ஏழை வீட்டுப் பையன் சக்தி (சிவகார்த்திகேயன்), பள்ளிப் பருவத்தில் தன்னை சாகசங்கள் புரியும் சக்திமானாக கற்பனை செய்து கொள்கின்றான். வளர்ந்து பெரியவனானதும் சிறந்த முறையில் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுகிறான். அந்த நேரத்தில் தந்தை நோய்வாய்ப்பட, அவரைக் காப்பாற்றப் பணம் தேவைப்பட, தனது தேர்ச்சிச் சான்றிதழை ஒருவன் கொடுக்கும் பணத்திற்காக விற்று விடுகிறான்.

#TamilSchoolmychoice

பின்னர் நகரத்தில், போலி பல்கலைக் கழக மற்றும் கல்விச் சான்றிதழ்களைத் தயார் செய்து தரும் நபராக தொழில் செய்கிறார் சிவகார்த்திகேயன். அப்படியே, பெரும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை தரகுப் பணத்திற்காக (கமிஷன்) தேடித் தரும் வேலையையும் பார்க்கிறார்.

அப்போது அவருக்கு ஏற்படும் சில பிரச்சனைகள் – இன்னொரு கோணத்தில் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனைத் திறனை வளர்த்து புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அர்ஜூனுடன் – கொண்டு சென்று சேர்க்கிறது.

அவர்களின் முயற்சிகளை, இளம் வயது மாணவர்களின் நவீனத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அழித்து விட பணக்கார வில்லன் துரத்த, சிவகார்த்திகேயனும், அர்ஜூனும் சேர்ந்து அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கூறுகிறது திரைக்கதை.

இடையில், சிவகார்த்திகேயன் எப்படி ‘ஹீரோ’வாக உருவெடுக்கிறார் என்பதையும் கதையில் சேர்த்திருக்கிறார்கள்.

படத்தின் பலவீனங்கள்

இந்தியில் ‘3 இடியட்ஸ்’ என்றும் தமிழில் ‘நண்பன்’ என்று தழுவியும் எடுக்கப்பட்ட படங்களில் கண்டுள்ள கல்வி தொடர்பான அம்சங்களை ஆங்காங்கே எடுத்து ஒரு முழுப்படமாக தந்திருக்கிறார் இயக்குநர் மித்ரன்.

ஆனால், இந்தியக் கல்வி முறை குறித்த அத்தனை அம்சங்களையும் ஒரே கதைக்குள் கொண்டு வர முயற்சி செய்திருப்பதால், திரைக்கதையை பல இடங்களில் சொதப்பியிருக்கிறார்.

மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் மழுங்கடிப்பது, கல்வி நிறுவனங்களில் பயில பெற்றோர்கள் பணத்தைக் கொட்டித் தருவது, இளம் மாணவர்களின் பயனான, நவீன கண்டுபிடிப்பு முயற்சிகள் நசுக்கப்படுவது, படித்தவர்கள் தொழிலாளர்களாக மட்டும் பயன்படுத்தப்படுவது, அவர்களும் நாளடைவில் வீடு, கார் என வசதிகளைத் தேடிச் செல்வது, சிறந்த மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போவது என பல விவகாரங்களை ஒரேயடியாக படத்திற்குள் புகுத்த இயக்குநர் முயற்சி செய்திருப்பதுதான் பின்னடைவு.

இது போதாது என்று, இடைவேளைக்குப் பின்னர் வில்லன்களை முறியடிக்க சிவகார்த்திகேயன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார், அர்ஜூனின் துணையுடன்! இது கதைக் களத்தைத் திசை திருப்புவதோடு, சிவகார்த்திகேயனும் அதனால் எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. வில்லன்களிடம் அடிக்கடி அடிவாங்குகிறார்.

இப்படியாகப் பல இடங்களில் நம்ப முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோ படக் கதாநாயகி – கல்யாணி பிரியர்தர்ஷன்

கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் – பிரபல மலையாளப்பட இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் – சில காட்சிகளோடு வந்து காணாமல் போய்விடுகிறார்.

அர்ஜூன் இளம் வயது மாணவர்களை ஊக்குவிப்பது சரி. அதற்காக, சுமார் பத்து வயதிருக்கும் பையன்களிடம் கூட ஆலோசனை கேட்பது உண்மையிலேயே அதிகப்படிதான்! சிவகார்த்திகேயனுக்கும் ஆலோசனை சொல்கிறான் அந்தப் பையன்!!!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி இசை ஓரளவுக்கு எடுபடுகிறது. ஆனால் பாடல்கள் ஈர்க்கவில்லை. இறுதிக் காட்சியில் வரும் பாடல் மட்டும் இளையராஜாவின் பின்னணிக்குரல் என்பதால் கணீரென ஒலிக்கிறது.

படம் முழுக்க எல்லாக் கதாபாத்திரங்களும் கல்வி அமைப்பில் உள்ள ஓட்டைகளை விமர்சித்துக் கொண்டே இருப்பதால் ஒரே பிரச்சார நெடி வீசுகிறது. பல இடங்களில் போரடிக்கவும் செய்கிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் நகைச்சுவை அம்சங்கள் முற்றாக இல்லாமல் இருப்பது இன்னொரு நெருடல் – ஏமாற்றம்!

படத்தின் பலம் – சிறப்பு அம்சங்கள்

படத்தின் ஹீரோ உண்மையில் பார்த்தால் கதைப்படி சிவகார்த்திகேயன் அல்ல! அர்ஜூன்தான். அந்த அளவுக்கு அவரைச் சுற்றி வலுவான பாத்திரப் படைப்பும், கதையமைப்பும் பின்னப்பட்டிருக்கின்றன. அதை ஈடு செய்யும் விதமாக, ஒற்றைக் காலுடன் நொண்டிக் கொண்டே அனாயசமாக நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஈடு செய்யும் விதத்தில் இளவயதுக்கார கதாபாத்திரத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார் அர்ஜூன். அந்த வகையில் படத்தைத் தூக்கி நிறுத்துவது அர்ஜூன்தான்.

படத்தைத் தூக்கி நிறுத்தும் இன்னொரு கதாபாத்திரம் வில்லனாக வரும் இந்தி நடிகர் அபய் டியோல். இந்திப் படவுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான அவர், ஸ்டைலான வில்லனாக, இறுக்கமான முகத்துடன் தனது வில்லத்தனத்தைக்காட்டி படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட உதவியிருக்கிறார்.

ஆனால், எதற்காக இத்தனை வில்லத்தனங்களை அபய் டியோல் செய்கிறார் என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள்! அவர் கல்வி நிறுவனம் நடத்துகிறாரா? வெளிநாட்டுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை ஏற்றுமதி செய்கிறாரா? அல்லது ஊடக நிறுவனம் நடத்துகிறாரா? என்பதில் குழப்பம். ஒரு கட்டத்தில் உப்பு நீரில் ஓடும் ஆட்டோவின் தொழில்நுட்பத்தை விற்பதற்காக அரேபிய ஷேக்குகளுடன் அபய் டியோல் பேரம் பேசுவது சரியான காமெடி!

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் – இருப்பதாகக் – காட்டப்பட்டிருப்பதும்!

இறுதிக்காட்சிகளில், உண்மையிலேயே பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் பல்வேறு பயனான கண்டுபிடிப்புகளை நிஜ வாழ்க்கையிலும் கண்டுபிடித்தவர்களையும், அவர்களின் முயற்சிகளையும் காட்டுகிறார்கள். படத்தின் கதைக் களத்திற்கு இது வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கிறது.

இறுதிக் காட்சியில் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் பேசுவதை வைத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களை – ஸ்கெட்ச் புத்தகங்களை – தேடித் திறந்து பார்ப்பதும் நெகிழ வைக்கிறது.

இப்படிப் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக, நேர்த்தியாகப் பின்னி திரைக்கதை அமைக்காததால் படம் ஏமாற்றத்தைத் தருகிறது.

இருந்தாலும், அர்ஜூனின் நடிப்பு, கல்வி குறித்த விவாதங்கள், சிந்தனை ஆற்றலுக்கு பல்கலைக் கழகப் படிப்பு தேவையில்லை என்ற கருத்தை சொல்லவந்த விதம் ஆகியவற்றுக்காக ‘ஹீரோ’ ஒருமுறை பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்