புதுடில்லி – கட்டணம் செலுத்தி இணையம் வழி திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையிலான வணிகப் போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் நெட்பிலிக்ஸ் தனது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்திருக்கிறது.
நெடுங்காலமாக இந்தியாவில் ஆழமாகக் காலூன்ற முடியாமல் நெட்பிலிக்ஸ் தவித்து வருவதற்கு அதன் கட்டணங்கள் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றன. தற்போது தங்களின் கட்டணங்களை நெட்பிலிக்ஸ் குறைத்து விட்டதால், இந்த சேவைகளுக்கான போட்டித் தன்மைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் மூன்று நிறுவனங்கள் இந்த மாதத்தில் தனது கட்டண விழுக்காடுகளை 41 விழுக்காடு வரையில் அதிகரித்துள்ளன. பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தங்களின் இணையம் வழியான பொழுதுபோக்கு அம்சங்களை தங்களின் கைப்பேசிகளின் வழியேதான் பார்த்து மகிழ்கின்றனர் என்பதால், நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைக்கும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலம் பேசும் மக்களையும், அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கத்தைக் கொண்ட மக்களையும் கொண்டிருக்கும் இந்தியாவில் 100 மில்லியன் சந்தாதாரர்களை நெட்பிலிக்ஸ் இலக்காகக் கொண்டிருக்கிறது. எனினும் மற்ற நிறுவனங்களின் போட்டிகளையும், கைப்பேசிகளில் இணையக் கொள்ளளவுக்கான கட்டணம் போன்ற பிரச்சனைகளையும் நெட்பிலிக்ஸ் இந்தியாவில் எதிர்நோக்குகிறது.