கோலாலம்பூர்: டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி நேற்று வியாழக்கிழமை அம்னோ கட்சியின் ஒழுக்காற்று வாரியத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்.
முன்னாள் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைனுக்கும், அம்னோ ஒழுக்காற்று வாரியத்திற்கும் இடையிலான சந்திப்பை இரத்து செய்த கட்சித் தலைவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“அம்னோ ஒழுக்காற்று வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி, வாரிய செயலாளரைக் கடிதம் தயார் செய்ய உத்தரவிட்டேன்.”
“நான் ஒரு குதிரையாக இருக்க விரும்பவில்லை. எனது வேலையை விட எனது கண்ணியம் முக்கியமானது, ”என்று அவர் மேலும் கூறினார்.
அம்னோ உறுப்பினராக அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக ஹிஷாமுடின் நேற்று வாரியத்திற்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட அந்த அமர்வு இரத்து செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.
இந்த உத்தரவு, கட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி கட்சி வாரியத்தின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் தெளிவாக மீறியுள்ளது என்று அவர் கூறினார்.
“ஒழுக்காற்று வாரியம் என்பது எந்தவொரு கட்சி தலைமைக்கும் உட்படாத ஒரு சுதந்திரமான அமைப்பு.”
“நடவடிக்கைகளை இரத்து செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது, அது சட்டபூர்வமானது அல்ல.” என்று அவர் மேலும் கூறினார்.
ஆயினும், அபாண்டி பதவி விலகல் கடிதத்தை கட்சி இன்னும் பெறவில்லை என்று கட்சித் தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.