கோலாலம்பூர்: அரசு ஊழியர்களுக்கான அத்தியாவசிய சேவை கொடுப்பனவு (அலவான்ஸ்) நிறுத்தப்படுவதை ஒத்திவைக்க பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.
மகாதீருடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்த பின்னர் சைட் சாதிக் இதனை கூறினார்.
“அத்தியாவசிய சேவை கொடுப்பனவு குறித்த புதிய சுற்றறிக்கையை ஒத்திவைக்கவும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கவும் பிரதமர் ஒப்புக் கொண்டார்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த சேவை கொடுப்பனவு குறித்த நிறுத்தத்தை எதிர்த்து சைட் சாதிக் எதிர்த்திருந்தார்.
பல சமூக ஊடக பயனர்கள் அவரது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் பங்களிப்பை நாடு பாராட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு, அத்தியாவசிய சேவை கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள் என 33 தொழில்களை அரசாங்கம் பட்டியலிட்டிருந்தது. அவர்களில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருந்தாளுநர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள், விவசாய மற்றும் கடல் பொறியாளர்கள் மற்றும் சட்ட அதிகாரிகள் அடங்குவர்.
ஆனால் சமீபத்தில், இந்த வேலைகளில் பெரும்பாலானவை அத்தியாவசிய சேவை பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டன.