கோலாலம்பூர்: காஜாங்கில் உள்ள நியூ ஏரா கல்லூரியில், இன்று சனிக்கிழமை நடைபெற இருந்த ஜாவி போதனைக்கு எதிரான மாநாட்டை, சீன கல்வியாளர் குழுவான டோங் சோங் நிறுத்துமாறு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காஜாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவித் தலைவர் அகமட் சாபிர் முகமட் யூசுப் கூறுகையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விண்ணப்பித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றதாகக் கூறினார்.
“இந்த உத்தரவு அதே நாளில் மாலை 5 மணிக்கு டோங் சோங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.”
“எனவே, மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசு சாரா அமைப்பு, சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டிலோ அல்லது வேறு எந்த கூட்டத்திலோ கலந்து கொள்ள வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் காவல்துறை அழைப்பு விடுக்கிறது.”
“மாநாடு தொடர்பாக நாடு முழுவதும் ஏராளமான காவல் துறையில் புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், இது குறித்து கருத்து தெரிவித்த டோங் சோங், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும், நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் டோங் சோங் குழு உறுப்பினர் லோ சீ சோங் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் டோங் சோங் மாநாட்டை நடத்துமா என்று கேட்டதற்கு, லோ இந்த விஷயத்தை அமைப்பின் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகக் கூறினார்.