கோலாலம்பூர்: நான்காம் ஆண்டு தேசிய மொழி பாடப் புத்தகத்தில் மூன்று பக்க ஜாவி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டோங் சோங் ஏற்பாடு செய்ய இருந்த கூட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்தும் என்று தெரிவித்த தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
சீனக் கல்வியாளர் குழு கலவரத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, ஏற்பாடு செய்த ஜாவி போதனை மாநாட்டை தடுக்க காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பெற்றது.
“தாங்கள் நியாயமாக இருப்பதைக் காண்பிப்பதற்கும், எந்த காரணமும் இல்லாமல் டோங் சோங்கின் மாநாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும், காவல்துறைக்கு இப்போது அதிக பொறுப்பு உள்ளது” என்று அவர் இன்று சனிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மலாய் அரசு சார்பற்ற நிறுவனங்களும், குழுக்களும், டோங் சோங் மாநாடு நடைபெறுவதை எதிர்த்து பேரணி நடத்த திட்டமிட்டிருந்தன.
பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் தீவிர எண்ணத்திலான அச்சுறுத்தல்களால் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் ஜாவி பிரச்சனைகள் குறித்த டோங் சோங்கின் சந்திப்பை காவல்துறை தடுத்திருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
“நான் முன்பு கூறியது போல, இன்னும் நான்கு நாட்களில் 2020 வந்துவிடும். இனம், மதம், மலேசியர்கள் என பொருட்படுத்தாமல் மலேசியர்களைக் கொண்டாடுவோம். ஜாவி பிரச்சனைகளில் நெருக்கடியைத் தீர்ப்போம்.”என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு மாநில துணை முதல்வர் பி.இராமசாமி கூறுகையில், இனரீதியான பதட்டத்தின் அடிப்படையில் டோங் சோங் மாநாட்டிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு கோரிய காஜாங் காவல்துறை நடவடிக்கையானது வருந்தத்தக்கது என்றார்.
“அது உண்மையான அடித்தளம் இல்லாத நடவடிக்கையாகும். மலாய் உரிமைகள் குழுவினால் தூண்டப்பட்டதால் இது நடந்துள்ளது. இந்த மாநாடு நடந்தால் நாட்டில் குழப்பம் சாத்தியம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.”
“பொய்யான செய்திகளையும் வெறுப்பையும் பரப்பிய குற்றவாளி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மாநாட்டை முறியடிக்க நீதிமன்ற உத்தரவைக் கோருவதன் மூலம் எளிதான வழியை எடுத்துள்ளனர்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.