
கான்பெரா – ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மல்லாகூட்டா (Mallacoota) என்ற ஊரில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் காட்டுத் தீயால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
வலுவான காற்று வீசியதால் எழுந்த காட்டுத் தீ, பெருமளவில் பரவியதோடு அதன் காரணமாக எழுந்த கரும்புகை மூட்டத்தால் வானம் முழுவதும் கருமையாகியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் இல்லங்களில் இருந்து வெளியேறிய சுமார் 4,000 பேர் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
அவசர நிலைமையைச் சமாளிக்க விக்டோரிய மாநில அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.