தோக்கியோ – கார் உற்பத்தி நிறுவனங்களான நிசான் மற்றும் மிட்சுபிஷி மோட்டோர்ஸ் ஆகியவற்றின் தலைவராகப் பணிபுரிந்த காலத்தில் நிதிமுறைகேடுகள் செய்தார் என ஜப்பானில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கார்லோஸ் கோன் (Carlos Ghosn-படம்) அங்கிருந்து துணிகரமாகத் தப்பி லெபனான் சென்றடைந்தார்.
ஜப்பானின் நீதித் துறை முறைதவறாக கையாளப்படுகிறது என்றும் அங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய கார்லோஸ் எவ்வாறு அதிகார மையங்களின் கண்களில் மண்ணைத் தூவி ஜப்பானிலிருந்து வெளியேறினார் என்பது மர்மமாக இருக்கிறது என ஊடகங்கள் தெரிவித்தன.
பிரான்ஸ், பிரேசில், லெபனான் ஆகிய மூன்று நாடுகளின் குடியுரிமைகளைக் கொண்டிருக்கும் கார்லோஸ் தன்மீதான வழக்குகள் தொடங்குவதற்கு முன்னரே தப்பிச் சென்றிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் நீண்ட கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற அபாயம் நிலவிய நிலையில் அவர் நாட்டை விட்டுச் சென்றிருப்பது தனக்கும் ஆச்சரியமான ஒன்று என அவரது வழக்கறிஞர் ஜூனிசிரோ ஹிரோநாகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கார்லோசின் அனைத்துலகக் கடப்பிதழ்கள் அவரது வழக்கறிஞர்களிடம் இருக்கின்ற காரணத்தால் அவற்றைப் பயன்படுத்தி அவர் நாட்டிலிருந்து வெளியேறியிருக்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
துருக்கி வழியாக அவர் லெபனான் சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.