Home One Line P1 புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வரவேற்போம் – வேதமூர்த்தி

புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வரவேற்போம் – வேதமூர்த்தி

706
0
SHARE
Ad

புத்ராஜெயா – மலரும் 2020-ஆம் ஆண்டை நாட்டின் புதிய விடியலுக்கான புதிய பாதையாக புத்துணர்ச்சியுடன் வரவேற்கும்படி மலேசியர் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவின் பலஇன மக்கள் 2020 புத்தாண்டை வரவேற்கத் தயாராகிவிட்ட இவ்வேளையில், கடந்துபோகும் ஆண்டின் நினைவுகளை மனதில் அசைபோடுவதும் புதிய ஆண்டுக்கான திட்டத்தை வகுப்பதும்தான் அனைவருக்கும் வழக்கம். பிரதமர் துன் மகாதீர் 1991-இல் வகுத்த ‘2020 துரநோக்குத் திட்டத்திற்கான அடைவுநிலை ஆண்டு இது; மலேசிய மக்கள் அனைவரும் தேசிய உணர்வால் ஒன்றுபடவும் அதிக உள்ளடக்கத்துடன் சமநிலை-வெளிப்படை சமூகமாக உருமாறவும் உதயமான இந்தத் திட்டம், இடையில் பொருள்வயப்பட்டதாக மாறிவிட்டது. இருந்தபோதும் பரஸ்பர புரிந்துணர்வு, கருத்து சுதந்திரம், மேம்பட்ட நிர்வாக சீரமைப்பின்வழி நாம் இன்னும் உன்னத நிலையை எட்ட முடியும்” எனவும் வேதமூர்த்தி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

தனிப்பட்ட முறையில், 2020 தூர நோக்குத் திட்டத்தின் தொடக்கமாக இவ்வாண்டைக் கருதி, இதுவரை நாம் காட்டிவந்த ஒற்றுமையை மேலும் நிலைநாட்டி தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“பல்லின சமுதாயமாக விளங்கும் நம்மிடையே காலங்காலமாக நிலவும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம். அறியாமை, ஐயம், அவநம்பிக்கை உள்ளிட்ட தீய அம்சங்களை விலக்கி வைப்போம். சமய சுதந்திரம், தாய்மொழிக் கல்வி உரிமை மற்றும் பண்பாட்டு உரிமை யாவும் உறுதிசெய்யப்பட்ட அந்த நாளை நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறேன். 2019-க்கு விடைகொடுத்து 2020-ஆம் ஆண்டை வரவேற்கும் மலேசியர் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டி நாளைய சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு பின்புலமாகவும் விளங்குவோம்” என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.