Home One Line P2 ஆப்பிள் டிவி+ அறிமுகம் கண்டது – தமிழில் துணையுரையுடன்!

ஆப்பிள் டிவி+ அறிமுகம் கண்டது – தமிழில் துணையுரையுடன்!

1018
0
SHARE
Ad

ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் டிவி+ எனப்படும் காணொளி சேவையை நவம்பர் முதலாம் நாள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவை, பயனர்களுக்கு மாறுபட்ட காணொளி உள்ளடக்கங்களைக் கணிசமான எண்ணிக்கையில் உடனடியாக வழங்குகிறது.

இது மாதச் சந்தா அடிப்படையில் வழங்கப்படும் சேவை என்றாலும், இவ்வாண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து புதிய ஆப்பிள் கருவிகளை வாங்கிய பயனர்களுக்கு ஒரு முழு ஆண்டு சேவையைச் சோதனை அடிப்படையில் இலவசமாக ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது.

இந்தப் புதிய சேவையின் உள்ளடக்கம், ஐபோன், ஐபேட், ஆப்பிள் டிவி, மெக் கணினி ஆகிய கருவிகளில் இயங்கும் சிறப்புச் செயலியின் வழி வழங்கப்படுகிறது. இந்தக் கருவிகள் அனைத்திலும் இயங்கும் புதிய இயங்குதளங்களில் இந்தச் செயலி இயல்பாகவே பதியப்பட்டிருக்கும். புதிதாக வெளிவரும் காணொளிகளின் பட்டியலை முதன்மைப் பக்கத்திலும் பயன்படுத்தும் போது மாறிமாறி வரும் மற்றத் திரைகளிலும் காணலாம்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சிகளை இணையம் வழியாகவும் காணலாம் அல்லது முழுமையாகக் கருவிகளில் தரவிறக்கம் செய்தும் காணலாம். தரவிறக்கம் செய்தபின் நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு இணைய தொடர்பு தேவைப்படாது. ஆனால் இணைய தொடர்போடு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும்போது, ஓர் இடத்தில் நிறுத்தினால், அதே இடத்தில் இருந்து வேறொரு கருவியிலும் தொடங்கலாம்.

மற்றச் சேவைகளுடன் போட்டி

ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தச் சேவை புதியது என்றாலும், இதுபோன்றச் சேவைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அமேசான் பிரைம், டிஸ்னி, நெட்பிளிக்ஸ், ஊலு போன்ற சேவைகள் ஆப்பிளின் புதிய சேவையைவிட அதிக அளவில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் இல்லாத சில உள்ளடக்கங்களைக் கொண்டும், ஆகக் குறைந்த விலையைக் கொண்டச் சேவையாகவும் ஆப்பிள் களமிறங்குகிறது.

ஆப்பிள் டிவி+ நிகழ்ச்சிகளில் தமிழில் துணையுரை

இந்தச் சேவையின் வழி வரும் நிகழ்ச்சிகளின் துணையுரைகள் (sub-titles), பல மொழிகளில் வழங்கப்படுகின்றன. அவற்றுள் தமிழும் ஒன்றாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புரியாத மொழிகளில் வரும் நிகழ்ச்சிகளை, இனி தமிழில் தோன்றும் துணையுரைகளைக் கொண்டு புரிந்து மகிழலாம்!

ஆப்பிளின் எல்லாக் கருவிகளிலும் தமிழ் வரிகள் இணைமதி எழுத்துருவிலும், இந்த எழுத்துருவின் புதிய வடிவமான தமிழ்-எம்என் எழுத்துருவிலும் தோன்றும். அதுபோலவே, காணொளிகளில் தோன்றும் துணையுரைகளும் இதே எழுத்துருவில் அழகாகத் தோன்றுகின்றன.

-செல்லினம்

படங்கள் : நன்றி : ஓம் தமிழ் முகநூல் தளம்