Home One Line P2 தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – திமுக, அதிமுக இடையில் கடும் போட்டி

தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – திமுக, அதிமுக இடையில் கடும் போட்டி

1039
0
SHARE
Ad

சென்னை – தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக, முறையே டிசம்பர் 27, 30 தேதிகளில் நடத்தப்பட்ட தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 2) தொடங்கி விறுவிறுப்பாக இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி, பல்வேறு குழப்பங்களுக்கிடையில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

ஏறத்தாழ இரு கட்சிகளும் மொத்த பதவிகளை தங்களுக்கிடையே சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகளும், சில இடங்களில் அதிமுக கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அமமுக சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் அந்த வழக்கு முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு ஒன்றை சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சமர்ப்பித்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது என்று கூறி திமுக சார்பில் முக ஸ்டாலின் தலைமையில் ஒரு குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவினரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இதற்குப் பதிலடியாக அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான ஒரு குழுவினர் திமுகவினர் பொய்ப் புகார் அளித்திருப்பதாகத் தங்களின் எதிர் புகாரில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

இதுவரையில் 21 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் எல்லா முடிவுகளும் வெளியிடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5090 ஒன்றிய நிர்வாக மன்ற உறுப்பினர்களுக்கான (கவுன்சிலர்களுக்கான) தேர்தலில் 2022 பேர் அதிமுக சார்பிலும் 2,242 பேர் திமுக சார்பிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். மற்ற கட்சிகளைச் சேர்ந்த 481 பேர் ஒன்றியக் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட மன்ற நிர்வாக உறுப்பினர்களுக்கான (கவுன்சிலர்கள்) போட்டியில் மொத்தமுள்ள 515 பதவிகளில் 235 பதவிகளை அதிமுக கைப்பற்றியிருக்கிறது. 267 பதவிகளை திமுக வென்றிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற போது 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதேபோல், மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த போது இதில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

சில புகார்களின் அடிப்படையில் சில தொகுதிகளில் மறு வாக்களிப்பும் நடைபெற்றது.