சென்னை – தர்பார் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரஜினிகாந்தின் இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பின் அறிமுக விழா கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 3-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ரஜினிகாந்த் தெலுங்கிலேயே பேசி அனைவரையும் அசத்தினார்.
தனது உரையில் “எல்லோரும் என்னிடம் 70 வயது ஆகும் உங்களால், இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது என்று எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்” என்று ரஜினி கூறினார்.
இதற்கிடையில் தர்பாருக்கு ‘யு/ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. ‘யு’ எனப்படும் அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய படத்திற்கான தணிக்கை வாரிய சான்றிதழைப் பெற தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தாலும், தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் காரணமாக படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.