கோலாலம்பூர்: சளிக்காய்ச்சல் (இன்புளூயன்ஸா) நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் இருப்பு போதுமானதாக இல்லை அல்லது கையிருப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டுகளையும், வதந்திகளையும் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
நாட்டில் சளிக்காய்ச்சல் பரவுவதைத் தொடர்ந்து, போதிய மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், தேவையை பூர்த்தி செய்வதற்கும் மாற்று நிறுவனங்களிடமிருந்து கூடுதல் மருந்துகளைப் பெற சுகாதார அமைச்சு முயற்சி எடுத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
சளிக்காய்ச்சல் நோய்த் தொற்றுகள் ஆபத்தான நிமோனியா சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் வுஹானைத் தாக்கிய நுரையீரல் தொற்று நோய் இன்னும் விசாரணையில் உள்ளதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கடந்த திங்களன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அது எந்தவொரு தொற்றுநோய்க்கான அறிகுறிகளாக தென்படவில்லை என்று சீன தரப்பு தெரிவித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்த சம்பவம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது, ஆனால், இதுவரையிலும், உலக சுகாதார மையம் சீனாவுடன் எந்த பயண மற்றும் வணிக கட்டுப்பாடுகளையும் வெளியிடவில்லை” என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சு இந்த சம்பவம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவ்வப்போது உலக சுகாதார மையத்தின் எந்தவொரு முன்னேற்றங்களையும் அது கவனிக்கும் என்றும் அவர் கூறினார்.