கோலாலம்பூர் – மத்திய கிழக்கு வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கும் பதட்டத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், செம்பனை எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
செம்பனை எண்ணெயைக் கடல் வழிப் போக்குவரத்தின் வழி கொண்டு செல்வதில் எதிர்வரும் காலங்களில் சிரமங்களும், அபாயங்களும் ஏற்படலாம் என்பதால் இதன் விலை வீழ்ச்சியடைவதாக வணிகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக செம்பனை எண்ணெய்க்கான ஒப்பந்த விலைகள் இப்போதே நிர்ணயிக்கப்பட்டு, அதன் விநியோகம் மட்டும் எதிர்வரும் மாதங்களில் நடைபெறும். மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்படவிருக்கும் செம்பனை எண்ணெயின் விலை 21 ரிங்கிட் குறைந்து 3,020 ரிங்கிட்டாக இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்தது. இது 0.8 விழுக்காட்டு வீழ்ச்சியாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விலை உயர்ந்து வந்த செம்பனை எண்ணெய் கடந்த வார இறுதியில் 3,149 ரிங்கிட்டாக உயர்ந்தது. ஜனவரி 2017 முதற்கொண்டு மிக அதிகமான விலை அதுவேயாகும்.
அமெரிக்கா, ஈரான் இடையில் அதிகரித்து வரும் பதட்டத்தின் காரணமாக மலேசியாவின் பங்குச் சந்தை மற்றும் மூலப் பொருட்களுக்கான சந்தைகள் பாதிப்படைந்தது செம்பனை விலை வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டத்தால் கடல் வழி போக்குவரத்துக்கான கப்பல் பயணப் பாதைகள் மாற்றியமைக்கப்படலாம், அதன் காரணமாக கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உயரலாம் போன்றவையும் செம்பனை விலை வீழ்ச்சிக்கான மற்ற காரணங்களாகும்.