புது டில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் (ஜேஎன்யூ) முகமூடி அணிந்து நுழைந்த கும்பல் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் இத்தாக்குதல்களைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்தனர்.
முகமூடி அணிந்தவர்கள் வளாகத்தில் அவர்களைத் தாக்கினர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆளும் பாஜகவுடன் தொடர்புடைய ஒரு மாணவர் குழு அதன் பின்னால் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
வன்முறையைக் கண்டித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த வன்முறை சம்பவம் கட்டண உயர்வு தொடர்பானது என்றும், கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை சீர்குலைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே, இந்தத் தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது. தேசத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர்களைத் தாக்கியதாக அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.