புது டில்லி: ஜேஎன்யூவில் நடந்த கும்பல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேற்று செவ்வாய்க்கிழமை, அத்தாக்குதலைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஒருபோதும் நாம் நம்மை வெளிப்படுத்த பயப்படுவதில்லை என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டையும் எதிர்காலத்தையும் பற்றி நாம் சிந்திக்கும் வேளையில், நம் கண்ணோட்டம் எதுவாக இருந்தாலும் நாடு முழுவதும் எதிர்ப்புகள் இருந்த போதும் மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்தவர்களின் வன்முறைக்கு இலக்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாறியது. அத்தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர்.
பல்கலைக்கழகத்தில் ஏதும் பேசவில்லையென்றாலும் தாக்கப்பட்ட மாணவர்களின் குழுவுடன் தீபிகா இணைந்து நின்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட்டவர்களை சந்தித்தார்.