கோலாலம்பூர்: மக்களுக்கு தொடர்ந்து உதவும் மனப்பான்மையுடன், இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைக் கட்டண உயர்வுகளையும் நிறுத்தி வைப்பதற்கான முடிவை நம்பிக்கைக் கூட்டணி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைக் கட்டண நிறுவனங்களுக்கு அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீட்டை செலுத்த வேண்டியிருந்த போதிலும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டு நெடுஞ்சாலைக் கட்டண விகிதத்தை அரசாங்கம் நிறுத்தியிருந்தாலும், அரசாங்கம் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.”
“இது ஒரு சிறிய எண்ணிக்கையல்ல, நிச்சயமாக, (கட்டண) விகிதம் அதிகரிக்கும் போது நிறைய (பணம்) சம்பந்தப்படும்” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மக்கள் இன்னும் பழைய கட்டணங்களை அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அனுபவிக்க முடியும் என்றும் இந்த விவகாரம் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் தொடரப்படும் என்றும் லிம் கூறினார்.
2019-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 21 நெடுஞ்சாலைகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் அரசாங்கம் நெடுஞ்சாலைக் கட்டண உயர்வை நிறுத்தியது.