கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் ஷா அலாம் உயர்நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 1எம்டிபி சம்பந்தப்பட்ட 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தெரிவித்தார்.
“இம்மாதிரியான உயர் பதவி நபர்களின் வழக்குகள் தீவிரமான, சிக்கலான, கடினமான சட்ட சிக்கல்கள் மற்றும் ஏராளமான ஆவணங்களை உள்ளடக்கியது” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பல்வேறு உயர் பதவி நபர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“பெரும்பாலானவை 1எம்டிபி ஊழலுடன் தொடர்புடையவை, ஆனால், வேறு சில வழக்குகளும் உள்ளன,” என்று அவர் கூறினார்.
வழக்குகள் தொழில் ரீதியாகவும், திறமையாகவும் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வழக்குகளையும் கையாள அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அனுபவம் வாய்ந்த துணை வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
“எனவே, எங்கள் சிரமங்களை புரிந்து கொள்ளவும், இந்த 27 வழக்குகளை கையாள்வதில் சிறிது இடத்தையும் கால அவகாசத்தையும் வழங்க நீதிமன்றங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறினார்.