புது டில்லி: கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்கண்ட்டில் கைது செய்யப்பட்டான்.
கௌரி லங்கேஸ், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் இந்த கொலைக்கு இந்தியாவில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் தொடர்பாக, இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. கெளரி லங்கேஷைக் கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நபர் இருந்ததாகவும், இவ்வழக்கில் 18-வது இடத்தில் இருப்பதாகவும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கொலைக் கும்பல் பல நபர்களின் பட்டியலையும் தயாரித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் மற்றும் பகுத்தறிவாளர் கே.எஸ்.பகவன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.