பெங்களூர் – கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, பெங்களூரில், பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ், மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
கௌரியின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் மற்றும் குறி தவறி அவரது வீட்டின் அருகே சிதறிய தோட்டா ஒன்றையும் தடவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவில்,அந்தத் தோட்டக்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கி வகையைச் சார்ந்தது என்பது தெரியவந்தது.
அதேவேளையில், அந்த தோட்டாக்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னட ஆராய்ச்சியாளருமான எம்.எம்.கலபுரகியின் உடம்பில் பாய்ந்த தோட்டாக்களோடு ஒத்துப் போகிறது என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதன் மூலம், பெங்களூர் காவல்துறை ஏற்கனவே யூகித்திருந்தது போல், கௌரி கொலையையும், கலபுரகி கொலையையும், ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களோ? அல்லது ஒரே கொலைகாரனோ? தான் செய்திருக்க வேண்டும் அல்லது ஒரே துப்பாக்கி தான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியிருக்கிறது.