மவுண்டன் வியூ (கலிபோர்னியா) – ஓர் அனைத்துலக பிரபலமாகி விட்டாலே, அவர் என்ன உணவு உண்கிறார், உடலை எப்படி கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார், எந்த மாதிரியான ஆடைகளை உடுத்துவார், அவரது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்பர்.
அந்த வகையில், உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி -உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகிகளில் ஒருவர் – எனப் பிரபலமாகியுள்ள சுந்தர் பிச்சையின் ஒருநாள் எப்படித் தொடங்குகிறது? எத்தகைய உணவுகளை அவர் காலை உணவாகக் கொள்கிறார் என்பது போன்ற விவரங்களை ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
சென்னையைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை சைவ உணவுகளை உட்கொள்பவர். என்றாலும் காலையில் தினமும் முட்டையை ஆம்லெட் வடிவில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். “நான் சைவ உணவுக்காரன் என்பதால் எனது புரதச் சத்துக்காக (புரொட்டீன்) தினமும் முட்டையை எடுத்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக, சுந்தர் பிச்சையின் காலை உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டியது தேநீர். ஆங்கிலேய பாணியிலான தேநீரை அருந்துவதோடு, வாட்டப்பட்ட ரொட்டியையும் காலை உணவாக சுந்தர் பிச்சை எடுத்துக் கொள்ளும்போது அவருக்குத் தேவையான மற்றொன்று அன்றைய தினசரி பத்திரிகை. இணைய உலகின் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும், அச்சடித்த ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையைத்தான் சுந்தர் பிச்சை தினமும் காலையில் படிப்பாராம்.
அவர் தொடர்ந்து செய்திகளுக்காக நாடும் இன்னொரு பத்திரிகை நியூயார்க் டைம்ஸ். இதனை இணையம் வழி படித்து விடுகிறார். காலை 6.30 மணி அல்லது 7 மணிக்குள் எழுந்து விடும் சுந்தர் பிச்சை அதிகாலையில் எழும் வழக்கத்தைக் கொண்டவன் நானில்லை எனவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உண்டா? என்ற கேள்விக்கு, தான் விரும்பினாலும் காலை வேளைகளில் அதற்கான நேரம் கிடைப்பதில்லை என்றும் மாலை வேளைகளில் மட்டும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.