தெஹ்ரான்: உக்ரேனிய பயணிகள் விமானத்தை கடந்த புதன்கிழமை தங்கள் இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய விவகாரத்தில், அரசாங்கத் தலைவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான எதிர்ப்பாளர்கள் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் எதிர் தாக்குதல் காரணமாக துருப்புக்கள் எச்சரிக்கையில் இருக்கும்போது நாட்டின் வான்வெளி மற்றும் பொது விமான நிலையங்களை மூடத் தவறியதற்காக தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானிய அரசாங்கத்தின் மீது கோபமடைந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமான உக்ரேனிய விமானம், தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்கள் கழித்து சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 176 பயணிகள் கொல்லப்பட்டனர்.
மூன்று நாட்கள் விபத்துக்கான காரணம் குறித்து அரசாங்கம் பொய் கூறியதாகவும், அது ஒரு விபத்து என வகைப்படுத்தியதாகவும் எதிர்ப்பாளர்கள் கோபமடைந்தனர்.
ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெய்னி ஈரானியர்கள் பயணம் செய்த விமானத்தை சுட தனது இராணுவத்தை அனுமதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காவல்துறையின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “கமெய்னி ஒரு கொலைகாரன்” என்று கூச்சலிடுவதைக் காண முடிந்தது.
இதற்கிடையில், போராட்டத்தை அமைதிப்படுத்த ஈரானிய அதிகாரிகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாகக் தெஹ்ரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.