கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் மாஜு அதிவேக நெடுஞ்சாலையின் (மெக்ஸ்) கிலோமீட்டர் 13.7-இல், லாரியுடன் கூண்டுந்து (வேன்) மோதியதில் நான்கு பயணிகள் காயமுற்ற வேளையில் ஓட்டுனர் மரணமுற்றார்.
அவர்களில் பூப்பந்து விளையாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரரான கென்டோ மோமோட்டாவும் அடங்குவார். கென்டோ இலேசாக காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கூண்டுந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோராசாம் காமிஸ் கூறினார்.
தற்போதைய உலக சாம்பியனான மோமோட்டாவைத் தவிர, மற்ற பயணிகளான ஹிராயமா யூ, மோரிமோடோ ஆர்கிபுகி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பூப்பந்து வீரர் வில்லியம் தாமஸ்ஸும் சம்பவத்தின் போது அவ்வாகனத்தில் இருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, மோமோட்டா, இங்குள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் மலேசியா மாஸ்டர்ஸ்ஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிப் பெற்றார். இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் முன்னாள் உலக சாம்பியனான விக்டர் ஆக்செல்சனை அவர் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.